தண்ணீர் என நினைத்து தின்னர் குடித்த குழந்தை..!!10 மாத குழந்தை பலி…
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது மகள் பரமேஸ்வரிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தாழநல்லூரில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாவிற்காக பரமேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் ஊருக்கு வந்துள்ளார்.
பரமேஸ்வரியின் இரண்டாவது குழந்தை கிஷ்வந்த் பிறந்து பத்து மாதமே ஆகிறது. அந்த இரண்டு குழந்தைகளும் நேற்றுமுன்தினம் பகல் வேளையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
சுப்புராயன் வீட்டில் பெயிண்டிங்க வேலை நடந்து கொண்டிருப்பதால் பெயிண்ட் அடிப்பதற்காக
தின்னர் வாங்கி வைத்துள்ளனர். அதை அறியாமல் அந்த 10 மாத குழந்தை விளையாடிக்கொண்டிருந்த கலைப்பில் தின்னர் பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
அது என்ன என்று அறியாமல் அந்த குழந்தை குடித்ததால் நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டு அந்த குழந்தை அழுதுள்ளது. குழந்தை வெகுநேரமாக அழும் சத்தம் கேட்டு தாய் பரமேஸ்வரி ஓடி வந்து பார்த்தார்.
அப்போது அந்தக் குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் பரமேஸ்வரி அலறியடித்து கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர்.
பின்னர் அந்த குழந்தை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் என நினைத்து தின்னர் எடுத்து குடித்த 10 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.