நடு ரோடில் 12ஆம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கிய கும்பல்… பொதுமக்கள் முன்னிலையில் நடந்த பகீர் சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை 8 பேர் கொண்ட கும்பல் பொதுமக்கள் முன்னிலையில் சுற்றி வளைத்து தாங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே புத்தேரி பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவன் நாகர்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் மற்றொரு பள்ளி மாணவனுக்கும் இடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அபிஷேக் இன்று காலை தனது வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக புத்தேரி பேருந்து நிறுத்தத்திற்கு சென்றபோது, அங்கு வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் மாணவனை நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளது.
இதனால் படுகாயம் அடைந்த மாணவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கவே விடாமல் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவன் தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.