நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!
நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.
நாய்களுக்கு பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடும் பழக்கத்தையும் மக்கள் வைத்துள்ளனர். அவை இறந்தால் நினைவுநாளில் கொண்டாடுவது என்று பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் செல்லப்பிராணிகள் மீது சொத்தை கூட எழுதி வைக்கின்றனர்.
ஆனால், இங்கு ஒரு தம்பதியினர் நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர்.
தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் உள்ள கூராக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் நாராயணன் மற்றும் ராதா. இவர்கள் தங்களுடைய வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நாய் கர்ப்பமானதை அறிந்த தம்பதியினர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டனர். பின்னர், வளர்ப்பு நாய்க்கு வளையல், புத்தாடை, பூ, பழங்கள் உள்ளிட்டவை வைத்து கிராம பெண்கள் சூழ பாட்டுப் பாடி வளைகாப்பு நடத்தினர்.
இந்த விழாவிற்கு வந்த கிராம மக்களுக்கு பிரியாணி விருந்தும் அளித்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.