பணத்திற்காக மாணவியை கடத்தி கொன்று புதைத்த சக மாணவர்!
புனேயில் பொறியியல் மாணவர் ஒருவர் தனது சக கல்லூரி மாணவியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாக்யஸ்ரீ (22). இவர் புனேயில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் திகதி வணிக வளாகத்திற்கு சென்ற மாணவி பாக்யஸ்ரீ மாயமானதாக அவரது பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, மர்மநபர் ஒருவர் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பாக்யஸ்ரீயை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க 9 லட்சம் தரவேண்டும் என்றும் அந்நபர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், பாக்யஸ்ரீ உடன் படித்து வரும் மாணவர் ஷிவம் புல்வாலே (23) தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
உடனடியாக அவர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பாக்யஸ்ரீயை கொலை செய்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஷிவம் கூறிய கிராமப் பகுதிக்கு சென்ற பொலிஸார், விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட மாணவி பாக்யஸ்ரீ உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.