முகுந்த் வரதராஜன் சாதியை படத்தில் காண்பிக்காதது ஏன்?’அமரன்’ இயக்குனர் விளக்கம்..!
தீபாவளி அன்று வெளியான சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்ற நிலையில், அந்த படத்தில் அவருடைய ஜாதியை மறைத்து காட்டியது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த கேள்விக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ‘அமரன்’ திரைப்படம் உலக அளவில் 150 கோடிக்கு அதிகமாக வசூல் செய்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில், முகுந்த் வரதராஜன் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையிலும், ’அமரன்’ படத்தில் அவரது ஜாதி அடையாளப்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு ’சூரரை போற்று’ படம் வெளியான போதும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ’அமரன்’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். முகுந்த் வரதராஜன் மனைவி இந்து எங்களிடம் ’முகுந்த்தை தமிழராக அடையாளப்படுத்த, தமிழ் சாயல் கொண்ட நடிகரை பயன்படுத்துங்கள் என்றும், அதேபோல் முகுந்துக்கு இந்தியன், தமிழன் என்ற அடையாளம் மட்டுமே போதும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். எந்த சூழ்நிலையிலும் முகுந்த் தன்னை இந்தியன் என்று தான் முன்னிலைப்படுத்தியுள்ளார் என்றும், அதனால் தான் அவரது சமூகம் குறித்த காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இது முகுந்த் வரதராஜனை கொண்டாட எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால், அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. அவரை ஜாதி வாரியாக பிரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதையும் தாண்டி, சக்கரா விருது பெற்ற முகுந்த் வரதராஜனின் பணிக்கும் தியாகத்திற்கும் ‘அமரன்’ திரைப்படம் மரியாதை செய்துள்ளது என்று அவர் கூறினார்