அக்டோபர் 27இல் த.வெ.க. மாநாடு!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி சமீபத்தில் மாநாட்டிற்கான பந்தக் கால் பூஜை விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பல்வேறு ஊர்களில் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார். இந்நிலையில் த.வெ.க. மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு, பொருளாதார குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதார குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகனம் நிறுத்த குழு, உள்ளரங்க மேலாண்மை குழு, மேடை வடிவமைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, தீர்மான குழு, உபசரிப்பு குழு, திடல் மற்றும் பந்தல் அமைப்புக் குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மகளிர் பாதுகாப்புக் குழு, அவசரக் கால உதவிக் குழு, கொடிக் கம்பம் அமைப்புக்குழு, வழிகாட்டும் குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, கட்டுப்பாட்டு அறை கண்காணிப்புக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, சமூக ஊடக குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சி குழு, விளம்பர குழு துப்புரவு குழு மற்றும் நிலம் ஒப்படைப்பு குழு என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தபடி, கட்சியின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா, வருகிற 27ஆம் தேதி (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், தலைவர் விஜய்யின் ஒப்புதலுடன் மாநாட்டுப் பணிகளுக்கென ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.