அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் ..ஆரோக்கியமான உணவு எது.???

ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன?
அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை மதிப்பிடலாம் என்றும் சொல்வதுண்டு. இவை வெறும் வாய்மொழிகள் அல்ல, ஆழமான அர்த்தங்களைக் கொண்டவை.
நமது ஆரோக்கியமும் ஒரு விதமான முதலீடு என்றே சொல்லலாம். எதை, எங்கே, எப்படி முதலீடு செய்கிறோம் என்பதை பொருத்துதான் அதற்கான பிரதிபலன் கிடைக்கும். அதாவது என்ன சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம், எந்த அளவு சாப்பிடுகிறோம் என்பதை பொருத்தே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சமச்சீரான முதலீடே நல்ல வருவாயை ஈட்டித்தரும். அதேபோல், சமச்சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவே ஆரோக்கியத்திற்கு அடிப்படை. இது கூடுதலாக மன ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வேலை திறனையும் கொடுக்கும்.உண்ணக்கூட நேரம் இல்லாமல் வேலைக்காக ஓடுகிறோம். ஆனால், வேலைக்காக நேர்த்தியாக உடுப்பதில் நேரம் செலவழிக்காமல் இருக்கிறோமா? வயிற்று பசிக்கு மட்டுமே உண்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பொறித்த, வறுத்த உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையோ அதைவிட அதிகம்.
இதுபோன்ற பல காரணங்களால் ஆரோக்கியம் சீர்கெடுகிறது. அதற்கு காரணம் அவசர யுகம் என்று சொன்னாலும், என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற அறியாமையும் முக்கியமான காரணம்.நமது ஆரோக்கியத்தை எப்படி பேணுவது? ஆரோக்கியம் தொடர்பாக பல ஆய்வுகள் தொடர்கின்றன. நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சீராக வைத்துக்கொள்ளவும் தேவையான உணவுகள் கொண்ட பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

மனித உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட 100 உணவு பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் சுலபமாக கிடைக்கும் உணவுப் பொருட்கள் சிலவற்றை பார்க்கலாம்.புரதச்சத்து அதிகம் உள்ளது பாதாம்பருப்பு. இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது இது. தினசரி ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 100 கிராம் பாதாம் பருப்பில் 597 கலோரிகள் உள்ளது. விஞ்ஞானிகள் பாதாமுக்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 97.பாதாமைப் போலவே ஆரோக்கியத்திற்கு கட்டியம் கூறுவது உலர் திராட்சை. சிவப்பு, லேசான மஞ்சள், கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும் இதற்கு கிடைத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.