அரசியல் களத்தில் இறங்கியது ஏன்? – த.வெ.க மாநாட்டில் விஜய் கொடுத்த விளக்கம்!

October 27, 2024 at 7:56 pm
pc

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாடு அரசியல் களத்தில் பலராலும் உற்று நோக்க கூடியதாக உள்ளது. மாநாட்டில் விஜய் என்ன பேசுவார்? எதை பற்றி பேசுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதில் அவர் பல விசயங்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அதில் முக்கியமாக அரசியலுக்கு வந்தது ஏன் என விஜய் விளக்கம் கொடுத்து பேசுயுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இந்த அரசியலெல்லாம் நமக்கு எதற்கு? சினிமாவில் நடிக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் என்று தான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் நாம் மட்டும் நன்றாக இருப்பது என நினைப்பது சுயநலம். நம்மை வாழவைத்த இந்த மக்களுக்காக எதுவும் செய்யாமல் இருப்பது விசுவாசமாக இருக்குமா?

ஒரு லெவலுக்கு மேல் காசு சேர்த்து என்ன செய்யப் போகிறோம். நமக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு என்னதான் செய்யப் போகிறோம். இப்படி ஏகப்பட்ட கேள்விகள் என் மனதிற்குள் வந்து கொண்டே இருந்தது. இப்படி எல்லா கேள்விகளுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரு விடையை யோசித்த பொழுது தான் அரசியல் எனும் விடை கிடைத்தது. வாழவைத்த மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

இந்த அரசியல் எப்படிப்பட்டது நம்மால் சமாளிக்க முடியுமா இது நம் இயல்புக்கு செட் ஆகுமா இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் வந்து கொண்டே இருந்தது. அரசியல் நமக்கு ஒத்து வருமா என்ற பூதக்கண்ணாடி வைத்து யோசித்தால் சரி வராது. பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் இறங்கி அடிச்சா தான் நம்மளை நம்புகிறவர்களுக்கு நல்லது செய்ய முடியும் என தோன்றியது, அதான் இறங்கியாச்சு.

இனி எதைப் பற்றியும் யோசிக்க கூடாது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதானம் யோசனை இருக்கிறது. நாம் யார், நாம் எவ்வளவு ஸ்டராங் என்பதை சும்மா வாயில் சொல்ல கூடாது செயலில் காட்ட வேண்டும். அதை நிரூபிக்க அரசியலில் நாம் என்ன நிலைபாடு எடுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் அதுதான் நம்முடைய எதிரிகள் யாரென்று சொல்லும். களத்தில் வெற்றியை தீர்மானிப்பது எதிரிகள் தான்.

பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வு கூடவே கூடாது என கட்சி தொடங்கிய அன்றே நமது கொள்கையை கையில் எடுத்து விட்டோம். நமது கொள்கைகளை அறிவித்ததும் சிலரின் கதறல்கள் இன்னும் வேகமாக கேட்கும்
வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம்.

ஊழலை எந்த அளவிற்கு ஒழிக்க முடியும் என தெரியவில்லை. பிளவுவாத சக்திகளை கூட எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஊழல் எங்கு ஒளிந்துள்ளது, எப்படி ஒளிந்துள்ளது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. ஊழலுக்கு முகமே இருக்காது முகமூடி தான் இருக்கும். முகமூடி போட்ட ஊழல்வாதிகள் தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டுள்ளனர். நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்தி, இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள்” என பேசியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website