அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பேய் ஓட்டிய சாமியாரால் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கொட்டபுத்தூரில் அரசு உண்டு உறைவிட மலைவாழ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அங்கேயே தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர்
நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த 10 மாணவிகளுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவிகள் கரியாலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் நேற்று காலையில் அவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர்.
பேய் ஓட்டிய சாமியார்
அந்த பள்ளியில் படித்த சில மாணவிகள் ஏற்கனவே இதுபோல் அடிக்கடி மயக்கம் அடைவதாகவும், சில மாணவிகள் தன்னைத்தானே கைகளை கிழித்துக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனால் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து பேயை விரட்டுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர் மாணவிகளுக்கு விபூதியை தலையில் போட்டு, பேய் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிண்டல் செய்யும் இளைஞர்கள்
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், பள்ளிக்கு ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை. மேலும் விடுதிகளிலும் இரவு நேரங்களில் ஆசிரியர்கள் சரியாக தங்குவதில்லை.
இதனால் சில இளைஞர்கள், விடுதியில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மாணவிகளை கிண்டல் செய்கின்றனர். இதனால் அவமானம் தாங்காமல் மாணவிகள் கைகளை கிழித்துக்கொள்கின்றனர். எனவே விடுதிகளில் ஆசிாியர்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்