அரசு முறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று (27.08.2024) இரவு 9 மணியளவில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அதாவது தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இதற்காகச் சென்னை ஆழ்வார்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கிளம்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கிலும் திமுக தொண்டர்கள் நின்று வழியனுப்பி வைத்தனர். அதே போன்று முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் சிறக்க அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் எனப் பலரும் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அமெரிக்கா செல்லும் முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அரசுப் பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு, வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி திரும்பி வருகிற மாதிரி பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகள் வந்திருக்கிறது. இந்தப் பயணங்கள் மூலமாக 18 ஆயிரத்து 521 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 10 ஆயிரத்து 882 கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இந்த அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க வாழ் தமிழர்களைச் சந்திக்க இருக்கிறேன். எல்லோருடைய வாழ்த்துகளோடும் இந்தப் பயணம் நிச்சயமாக வெற்றிகரமானதாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.