அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள நடுக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ஜெயப்பிரியா. கர்ப்பிணிப் பெண்ணான இவர் கடந்த கடந்த 21ஆம் தேதி பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் ரத்தக் கசிவு இருந்ததாகவும், அடுத்த நாள் ரத்தக் கசிவு அதிகமாக இருந்ததனால் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் ஜெயப்பிரியாவிற்கு இரத்தபோக்கு அதிகம் இருந்த காரணத்தினாலும், சிறுநீர் வெளியேறுவதிலும் காணப்பட்ட பிரச்சனை காரணமாக அவரது அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாகச் சிகிச்சையில் இருந்து வந்தார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் போது செவிலியர்கள், மருத்துவர்கள் மருத்துவர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி குமுளி – மதுரை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.