ஆச்சரிய தகவல்!! ஒரு வீடுகளில் கூட சமைக்காத வினோத கிராமம்!
இந்திய கிராமம் ஒன்றில் ஒரு வேளை கூட வீடுகளில் சமைத்து சாப்பிடாத நிலை உள்ளது. அந்த கிராமம் எங்குள்ளது என்பதை பார்க்கலாம். தற்போதைய காலத்தில் மூன்று வேளைகளிலும் உணவு டெலிவரி ஆப் மூலம் ஒர்டர் செய்து சாப்பிடும் நிலைமை ஒரு புறம் இருக்க, இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் வீடுகளில் சமைக்காத நிலைமையும் மறுபுறம் உள்ளது.
இந்திய மாநிலமான குஜராத், மஹிசனா மாவட்டத்தில் சந்தன்கி கிராமத்தில் தான் வீடுகளில் சமைக்காத நிலை உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அதில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் தான்.
இவர்களில் ஒருவரது வீடுகளில் கூட சமைப்பதில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் வயது முதிர்ந்தவர்களுக்கு தனிமை விரக்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக தான்.
முன்பு இந்த கிராமத்தில் மொத்தம் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்துள்ளனர். ஆனால், அங்குள்ள இளைஞர்கள் படித்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று விட்டனர். தற்போது இந்த கிராமத்தில் வயது முதிர்ந்தவர்கள் தான் உள்ளனர்.
இந்த கிராமத்தில் பொதுவாக ஒரு சமூக சமையல் கூடம் உள்ளது. இங்கு தான் அனைத்து மக்களுக்கும் சமையல் தயார் செய்யப்படுகிறது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் நோக்கத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதற்காக ஒரு நபர் மாதம் ரூ.2000 கொடுக்க வேண்டும். அதேபோல மாதம் ரூ.11,000 ஊதியத்தில் ஒரு சமையல் காரர் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் ஆரோக்கியமான மற்றும் குஜராத்தி வகை உணவுகளை சமைத்துக் கொடுத்துவிடுவார்.
இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு பூனம் பட்டேல் என்பவர் தான் முக்கிய காரணம். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த கிராமத்தில் உள்ள சமையல் கூடத்தில் உணவு பரிமாறப்படுகிறது. இங்கு வரும் மக்கள் அவர்களுடைய சுக, துக்கங்களை பரிமாறிக் கொள்வதால் பிணைப்பு உருவாகிறது” என்றார்.