ஆரோக்கியத்திற்கும் அருமருந்தாக இருக்கும் அமரந்த் தானியம் பற்றி தெரியுமா.?

ஆரோக்கியமாக இருப்பதற்கான முயற்சியில், நாம் பல உணவுகளை உட்கொள்கிறோம். சில சமயங்களில் அவற்றின் நன்மைகளை முழுமையாக புரிந்து கொள்ளாமல் அதனை சாப்பிட்டு வருகிறோம். இது போன்று பல வகையான உணவுகளை சொல்லலாம். அந்த வகையில், அமரந்த் என்கிற தானிய வகையை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. உங்கள் உணவில் அமரந்த்தை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் உண்டு. ஏனெனில், இதில் நார்ச்சத்து, அத்தியாவசிய அமினோ அமிலங்கள், லிப்பிடுகள், ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ், மாங்கனீசு, இரும்புசத்து மற்றும் அதிக அளவு கால்சியம் ஆகியவை உள்ளன.
மேலும், உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு, ஆன்டித்ரோம்போடிக் மற்றும் ஆன்டி-ப்ரோலிஃபெரேடிவ் ஆகிய பண்புகளை இது கொண்டுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் பசையம் இல்லாத தன்மை காரணமாக பெரும்பாலும் இது ஒரு சிறந்த வகை தானியமாக கருதப்படுகிறது. இந்த அமராந்த் தானியம் இதயம், எலும்பு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது என்று ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிம்பிள் ஜங்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். இப்படி நன்மைகள் நிரம்பிய இந்த தானியத்தின் மேலும் பல பயன்களை பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.
இதய ஆரோக்கியம் :
அமரந்த் தானியத்தில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. மேலும், இதில் ஃபீனாலிக் அமிலம் நிறைந்துள்ளது, இது நோய்களைத் தடுக்கவும், இதய தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும், அமரந்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ரூடின் மற்றும் நிகோடிஃப்ளோரின் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. செறிவூட்டப்படாத கொழுப்பு அமிலங்கள், டோகோபெரோல்கள் மற்றும் பாலிபினால்கள் ஆகியவை இதில் அதிகம் உள்ளது. இது மொத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) மற்றும் மிகக் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (VLDL) ஆகியவற்றை கணிசமாகக் குறைக்கிறது. எனவே, மற்ற தானியங்களை போன்று அமரந்த் தானியத்தையும் உணவில் சேர்த்து கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
எலும்பு ஆரோக்கியம் :
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அமரந்த் தானியத்தில் நிறைந்துள்ளது. எனவே, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்கு இந்த தானியம் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், அமராந்தில் உள்ள கணிசமான அளவு லைசின், கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது மற்றும் சிறுநீர் மூலம் கால்சியம் வெளியேற்றத்தை குறைக்கிறது.
செரிமான ஆரோக்கியம் :
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. அமரந்தில் எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து உள்ளது, இது கரையாத நார்ச்சத்துடன் சேர்ந்து, மலத்தில் மொத்தமாக சேர்க்க உதவுகிறது. பெப்டிக் அல்சர் மற்றும் நாள்பட்ட இரைப்பை அழற்சி உள்ளவர்களுக்கு அமரந்த் எண்ணெயை உட்கொள்வது நன்மை பயக்கும்.
குழந்தைகள், இளம் பருவத்தினர், பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள், மோசமான ஊட்டச்சத்து அல்லது மோசமான உணவுப்பழக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள், அனோரெக்ஸியா போன்ற நோய்கள் உள்ளவர்கள் இந்த அமரந்த் தானியத்தை அவசியம் எடுத்து கொள்ளலாம் என்று பறித்துரைக்கப்படுகிறது.