‘இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழகம்’ – முதல்வர் பெருமிதம்!

August 18, 2024 at 2:44 pm
pc

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லம் – வடகால் கிராமத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 18 ஆயிரத்து 720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் 706.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா இன்று (17.08.2024) மாலை 05.45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு குடியிருப்பு குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைத்து பெண் பணியாளர்களுக்குச் சாவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும்விட தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. அதாவது 42 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது. 

அந்த வகையில், இந்த நிறுவனத்தின் சமத்துவ நோக்கத்தைப் பாராட்டுகிறேன். வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’. அது மட்டுமல்லாமல், இன்னும் பல புதுமையான திட்டங்களைப் பெண்களுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது.

பணிக்குச் செல்லும் தாய்மார்களின் நலன் கருதி. சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்கனவே 63 குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. மேலும், சிப்காட் நிறுவனம் நேரடியாகக் குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்த முடிவெடுத்து இருக்கிறது. அதை ஊக்குவிக்கும் அரசுப் பெண்களைத் தொழில் முனைவோராக உருவாக்க, இளம் வயதிலேயே வகையில், பள்ளிகளில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்காக. உலக வங்கி உதவியோடு தமிழ்நாடு அரசு வி சேப் (WE SAFE) திட்டத்தைத் தொடங்கி, பயிற்சி அளித்துக் கொண்டு வருகிறது.

திராவிட மாடல் அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்லாமல், தெற்கு ஆசியாவிலேயே முன்னணி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று இலட்சிய இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் வெற்றியும் பெற்று வருகிறோம். நிதி ஆயோக் அமைப்பின் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருக்கிறது. பத்து குறியீடுகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 13 குறியீடுகளில் தமிழ்நாடு 11-ல் தேசிய சராசரியைவிட அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது.

2023-2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.19 விழுக்காடு பங்களிப்போடு தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று இங்குக் குறிப்பிடுவது அவசியம் என்று நினைக்கிறேன். இந்தியாவிலேயே பன்முகத்தன்மையோடு தொழில் துறைக்குச் சாதகமான எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கி வருகிறது” எனத் தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website