இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் பறிப்பு – ஜெர்மனியிலிருந்து மோசடி…!!!

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, இளம் பெண்களின் படங்களை எடுத்து மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த கும்பலை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த திருமணமான இளம் பெண் ஒருவர், எஸ்.பி., வருண்குமாரின் சிறப்பு அலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில் இன்ஸ்டாவில் பதிவேற்றிய அவரது படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து ஒரு கும்பல் மிரட்டலில் ஈடுபட்டு வருதாக கூறியிருந்தார்.
மிரட்டலுக்கு அஞ்சியதால் அந்தக் கும்பல் அவரை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்ததாகவும் அதை வைத்து மிரட்டி ஏழரை லட்சம் ரூபாய் வரை பணம் பறித்ததாகவும, தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.
தான் மட்டுமல்லாமல் பல பெண்களிடம் அந்த கும்பல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி , பின்னர் போட்டோக்களை மார்பிங் செய்து மிரட்டி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதையடுத்துஅந்த பெண் பணம் அனுப்பிய கூகுள் பே, பேடிஎம், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும், அந்த பெண்ணிடம் பழகிவந்த மிரட்டல் நபரின் இன்ஸ்டா ஐ.டி. செயல்படும் ஐ.பி. முகவரியையும் சோதித்தனர். அதில் ஜெர்மனியில் இருந்து அந்த மோசடி கும்பல் செயல்பட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து விசாரித்த போது மார்பிங் மிரட்டல் கும்பலின் தலைவன் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த முகமது முகைதீன் எனத் தெரிய வந்தது.
அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட முகைதீனின் நண்பர்களான புதுச்சேரியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் நுார், சென்னையைச் சேர்ந்த பாசித்அலி, திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் பார்டு பைசுல், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாசிம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.
பின்னர் ஜாசம் கனி, பார்டு பைசுல் ஆகியோரை கைது செய்த ராமநாதபுரம் போலீசார், தமிழகத்தில் உள்ள மற்ற மூவரை தேடி வருகின்றனர்.
மேலும், ஜெர்மனியில் உள்ள முகமது முகைதீனை இந்தியா வர வைத்து கைது செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.