இறந்த மகனின் விந்தணுவுக்கு உரிமை கோரும் பெற்றோர்: நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு!
இறந்த மகனின் விந்தணுவுக்கு உரிமை கோரும் பெற்றோரின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்திய தலைநகரான டெல்லியைச் சேர்ந்தவர் ப்ரீத் இந்தர் சிங் (30). இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் கொடுத்து சேமித்து வைத்துள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ப்ரீத் இந்தர் சிங் உயிரிழந்துள்ளார். இதனால், அவர் சேமித்து வைத்திருந்த விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவருடைய பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கினை நீதிபதி பிரதீபா சிங் விசாரித்தார். அப்போது அவர், “இறந்த நபரின் விந்தணுவை சொத்தாக பாவிக்க முடியும் என்றும், இந்துமத சொத்துரிமை சட்டத்தின்படி பெற்றோருக்கு மகனின் சொத்தில் முதல் உரிமை உள்ளது என்றும் கூறி இறந்த மகனுடைய விந்தணுவை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த விந்தணுவை பெறும் ப்ரீத் இந்தர் சிங்கின் பெற்றோர், வாடகை தாய் மூலம் குழந்தை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.