‘உயிருடன் பிடிபட்டது T23 புலி’நிம்மதி பெருமூச்சுவிட்ட மசினகுடி!
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் 21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூர், மசினகுடியில் நான்கு பேரை தாக்கி கொன்ற புலியை செப்., 25 ம் தேதி முதல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நேற்று, முதுமலை ஒம்பட்டா பகுதியில், புலியை தேடினர் , மாலை வரை புலி இருப்பிடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
இரவு 9:30 மணிக்கு தெப்பகாடு – மசினகுடி சாலையில் நடந்து, சென்ற புலிக்கு, கால்நடை மருத்துவ குழுவினார் மயக்க ஊசி செலுத்திய பின்னர் பிடிக்க முயன்றனர். ஆனால், மயக்கம் தெளிந்த நிலையில் புலி, அவர்களிடம் சிக்காமல் தப்பியது.
இந்நிலையில், அந்த புலிக்கு நேற்று இரவு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையிலும் இன்று பிற்பகல் கூட்டுப்பாறை பகுதியில், புலி தென்பட்டது.
இதனையடுத்து தற்போது அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ள வனத்துறையினர், தங்களது கட்டுப்பாட்டிற்குள் புலியை கொண்டு வந்துள்ளனர். புலி மயக்கமடைந்ததை தொடர்ந்து, அதனை பிடித்து கூண்டில் ஏற்றினர்.