எட்டு முறை பாஜகவிற்கு ஓட்டு போட்ட சிறுவன்: வெளியான அதிர்ச்சி வீடியோ!
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் மற்றும் ஐந்தாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதியும், இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் 18 வயது நிரம்பாத சிறுவன் எட்டு முறை பாஜகவிற்கு ஒரே நேரத்தில் வாக்களித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பார்காபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
அப்பொழுது வாக்குச்சாவடிக்குள் நுழைந்த சிறுவன் ஒருவன் பாஜகவிற்கு 8 முறை வாக்களித்து அதை வீடியோவாக பதிவு செய்ததோடு, விவிபாட் இயந்திரத்தில் வாக்கு பதிவான ஒப்புகை சீட்டையும் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தச் சிறுவனின் தந்தை பாஜகவின் உறுப்பினராகவும், அந்த கிராமத்தின் ஊராட்சித் தலைவராகவும் இருப்பதால் இப்படி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாக்குச்சாவடிகளில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.