“எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன், அதை மனதில் வைத்தே வாருங்கள்” – தவெக தலைவர் விஜய்!
மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்புடன் வர வேண்டும் என எதிர்பார்ப்பதாக விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “எல்லா வகைகயிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே, மாநாட்டுக்குப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று.
உங்கள் பாதுகாப்புக் கருதியே இதை சொல்கிறேன். காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.
நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” என கூறியுள்ளார்.