எனக்கு முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள், மறுத்துவிட்டேன்: பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்!!

December 27, 2024 at 11:00 am
pc

எனக்கு முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என்று பிரபல வில்லன் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகை பொருத்தவரை நடிகர்கள், நடிகைகள் அரசியலில் நுழைவது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தளபதி விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நிலையில், பிரபல ஹிந்தி நடிகர் சோனு சூட் தமிழ் உள்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் நிலையில், கொரோனா காலத்தில் ஏழை எளியவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். வில்லன் நடிகராக இருந்தாலும், “அவர்தான் ரியல் ஹீரோ” என்று மக்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சோனு சூட் சமீபத்தில் அளித்த பேட்டியில், “தனக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். முதலில் எனக்கு முதல்வர் பதவி தருவதாக சொன்னார்கள். நான் அதை மறுத்தபோது, துணை முதல்வர் மற்றும் எம்பி பதவிகளை தருவதாகவும், அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், அரசியலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

மேலும், “அரசியலில் சேர்ந்தவர்கள் இரண்டு காரணங்களுக்காக மட்டுமே செல்கிறார்கள். ஒன்று பணம் சம்பாதிக்க, இன்னொன்று அதிகாரம் பெற. எனக்கு இந்த இரண்டிலும் ஆர்வம் இல்லை. அரசியலுக்கு வந்தால் டெல்லியில் வீடு, பதவி, பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும் என்று பலர் கூறினாலும், நான் அதை ஏற்பதற்கு தயாராக இல்லை. எனக்குள் இன்னும் ஒரு நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கிறார். அந்த வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

அதே நேரத்தில், நான் அரசியலுக்கு எதிரானவன் அல்ல. சிறப்பாக பணி செய்யும் அரசியல்வாதிகளை மதிக்கிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website