ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வரக்கூடாது? ஏஆர் ரஹ்மான்
மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் இருந்து தொடங்கக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஏஆர் ரஹ்மான் எழுதி இயக்கிய ’Le Musk’ என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜி திரைப்படத்திற்கு சென்னை ஐஐடி விருது வழங்கிய நிலையில் இதுகுறித்த விழாவில் அவர் பேசியதாவது:
“உலக தரத்தில் ஒரு விர்ச்சுவல் திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதற்காக, அந்த படத்திற்கு விருது கிடைத்ததற்காக, அதுவும் நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் 37 நிமிடங்கள் படம் பார்த்தவர்கள் 10 நிமிட படமா என கேட்டனர். அந்த அளவுக்கு அனைவரும் படத்தை ரசித்தனர்.
இந்தியாவிலிருந்து ஏன் ஒரு ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கக்கூடாது? தொழில் வளர்ச்சி என்பது நம் நாட்டிற்கு மிகவும் அவசியம். புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும்.
VR என்பது வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழில்நுட்பம். இதன் மூலம் கோயில்களை சுற்றி பார்க்கலாம், கல்யாண நிகழ்ச்சிகளை உணர்வு பூர்வமாக ரசிக்கலாம். நம் நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால் அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் இசை மூலம் மனிதனுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சியும் வளர்ந்து வருகிறது. கற்பனைக்கு கட்டுப்பாடுகள் இல்லை,” என்று அவர் கூறினார்.
அவரது பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.