ஐந்து நாட்களாக தேடியும் கிடைக்காத மீனவர்: நிவாரணம் அறிவித்த முதல்வர்!
அண்மையில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சில மீனவர்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி (01/08/2024) அதிகாலை நேரத்தில் நெடுந்தீவு அருகே ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது நான்கு மீனவர்கள் பயணித்த படகு மீது இலங்கை கடற்படையினுடைய ரோந்துக் கப்பல் மோதியது. இதில் மலைசாமி என்ற மீனவர் உயிரிழந்த நிலையில் அவருடைய குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு நிதியுதவியும் அறிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தில் ராமச்சந்திரன், முத்து, முனியாண்டி, மூக்கையா உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போன நிலையில் முத்து, முனியாண்டி, மூக்கையா ஆகியோர் மீட்கப்பட்டனர். ஆனால் மீனவர் ராமச்சந்திரன் கிடைக்கவில்லை. கடந்த ஐந்து நாட்களாக இந்திய கடலோரப் படையினர் தேடியும் மீனவர் ராமச்சந்திரன் கிடைக்காத நிலையில் அவரது குடும்பத்தினரின் சூழ்நிலையில் கருத்தில் கொண்டு அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாயை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.