கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு; கலெக்டர் போட்ட உத்தரவு…

April 3, 2022 at 7:06 pm
pc

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கொசவம்பாளையத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரம்யா (29). அவரது கணவர் பிரகாஷ். கர்ப்பிணியாக இருந்த ரம்யா உடல்நலக்குறைவினால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா சிங் கவனத்துக்கு சென்றுள்ளது. இதுகுறித்து விசாரிக்க நலத்துறை துணை இயக்குநர் மருத்துவர்.வளர்மதி தலைமையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்ட குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட குழுவினர், உயிரிழந்த ரம்யா வசித்த பகுதியில் உள்ள மருதம் என்ற மருந்தகத்தில், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருகலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட ராமாபுரம் பகுதியில் உள்ள மருதம் மருந்தகத்தில் ஆய்வு செய்ய சென்றனர். சம்மந்தப்பட்ட மருந்தகம் பூட்டியிருந்ததையடுத்து, மருந்தக உரிமையாளரை தொடர்பு கொண்டனர். 

மேலும் மருந்தகத்தின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த மருந்து பெட்டிகளில், பயன்படுத்திய காலி ஊசிகள், ஊசிக் குழல்கள், மருதம் மருந்தகத்தின் விலாசம் கொண்ட பெட்டிகள் இருந்ததை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். நீண்ட நேரமாகியும் மருந்தகத்தின் உரிமையாளர் வராததையடுத்து, மருதம் மருந்தகம் மார்ச் 31 ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து மாத்திரைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பின்னர் அதே நாளில் இரவு சுமார் 10.30 மணியளவில் மருதம் மருந்தகத்தின் மேற்கூரையை மருந்து கடை உரிமையாளர் முத்துசாமி பிரித்து உள்ளே புகுந்து மருந்து மாத்திரைகளை எடுத்து சென்றுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து தற்போது தாய்மார்கள் கருகலைப்பு செய்யும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பயிற்சி பெறாத மருத்துவர், அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் (மெடிக்கல் ஷாப்) கருக்கலைப்புமாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் மற்றும் மரணம் ஏற்படுகின்றது. 

தேவையற்ற மற்றும் வேண்டத்தகாத கர்ப்பங்களை பாதுகாப்பான முறையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கருக்கலைப்பு சிகிச்சை செய்து கொள்ளலாம். 7 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகள் மூலமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். மேலும் 10 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பங்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதற்கு தங்கள் பகுதி கிராம சுகாதார செவிலியரை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்.

எனவே, தேவையற்ற கர்ப்பத்தை, கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்பும் கர்ப்பிணித் தாய்மார்கள், பயிற்சி பெறாத மருத்துவர்களிடமோ, அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகளிலோ கருக்கலைப்பு செய்ய மேற்கொள்ள வேண்டாம். மேலும் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்து, மாத்திரைகளை விற்பவர்கள் மீதும், போலி மருத்துவர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website