‘கலைஞர் பூங்கா’ கட்டண வசூல் விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம்!
புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் குறித்து “நுகர்வோர் நலன் மக்கள் விழிப்புணர்ச்சி மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் தமிழ்நாடு” புதுக்கோட்டைக் கிளை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநகராட்சி பொது தகவல் அலுவலர் 11 ந் தேதி கொடுத்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது, புதுக்கோட்டை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள கலைஞர் பூங்கா கடந்த 24.02.2024 அன்று திறக்கப்பட்டது. தற்போது பொதுமக்களிடம் எவ்வித நுழைவுக்கட்டணமும் வசூலிக்கவில்லை என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் கொடுக்கப்பட்ட பிறகு நுழைவுக்கட்டணம் வசூலை சில நாட்கள் நிறுத்தி உள்ளனர். இந்த ஆர்.டி.ஐ. தகவல்படி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியானது. இதனால் இத்தனை நாள் யார் வசூல் செய்தது?. அந்தப் பணம் என்ன ஆனது? மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பூங்காவில் வெளிநபர்கள் வசூல் செய்தார்களா?. அப்படியானால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எனப் பல கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பிய நிலையில் பரபரப்பானது.
இந்த நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர் நாராயணன் வெளியிட்டுள்ள தகவலில், ஆர்.டி.ஐ யில் கேட்கப்பட்ட கேள்விக்கு பொது தகவல் அலுவலர் அல்லாத செயற்பொறியாளர் தவறான தகவலைக் கொடுத்துள்ளார். நகராட்சி தீர்மானத்தின்படி “மு.கருணாகரன் கே இன்ப்ரா” நிறுவனத்திற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே தவறான தகவலைக் கொடுத்த உதவிப் பொறியாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் உள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் நம்மிடம், “நகராட்சியாக உள்ள போதே நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிப் பராமரிப்பு பணிகளுக்காக நுழைவுக் கட்டணம் வசூல் செய்ய மு.கருணாகரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்ட அமைப்பினர் கள ஆய்விற்கு மாநகராட்சி வந்து உதவிப் பொறியாளரிடம் பேசிய பிறகு பொதுத் தகவல் அலுவலர் அல்லாத அவர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று தவறான தகவலைக் கொடுத்துள்ளார். அந்த தகவல் வேகமாகப் பரவியுள்ளதால் சில நாட்கள் நுழைவுக்கட்டண வசூலை நிறுத்தி உள்ளனர். தற்போது தவறான தகவல் கொடுத்த உதவிப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் துறை நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதன் பிறகு மேலும் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள், பொது ஏல அறிவிப்பு விடாமல் எப்போது எப்படி ஒரு நிறுவனத்திற்கு மொத்த வசூலும் செய்ய ஒப்பந்தம் விடப்பட்டது. நுழைவுக் கட்டணம் மட்டுமின்றி உள்ளே பல இடங்களில் வசூல் பலமான வசூல் நடக்கிறதே அதற்காக மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைத் தான் வசூல் செய்கிறார்களா? அதற்கான ரசீது வழங்குவதில்லையே ஏன்? இதனை மாநகராட்சி நிர்வாகம் கட்டண விபர விளம்பரப் பலகை வைக்காதது ஏன் என்ற பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.