கள்ளக்காதலியின் கண்களை கட்டிங்பிளேயரால் சேதப்படுத்திய தொழிலாளி!
மதுகுடிக்க பணம் தராததால் கட்டிங்பிளேயரால் கள்ளக்காதலியின் கண்களை சேதப்படுத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டி அழகு தேவன்குளம் சாலையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த ராஜலட்சுமி மகள்களுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவரது நடவடிக்கையால் வேதனை அடைந்த பெற்றோரும் அவருடன் பேசுவதில்லை.
அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். (32). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் மனைவி தங்கமாரி 2 குழந்தைகளுடன் அழகாபுரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மணிகண்டனுக்கும், ராஜலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
ஆனாலும் மணிகண்டனுக்கு தொடர்ந்து மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வந்தார். இதனால் ராஜலட்சுமிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மதியம் மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதுபற்றி ராஜலட்சுமி கேட்டார். மணிகண்டன் மது குடித்து இருந்ததால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டன் மது குடிப்பதற்கு ராஜலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.
இது மணிகண்டனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்த கட்டிங் பிளேயரை வைத்து அவரை சரமாரியாக தாக்கினார்.
மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜலட்சுமியின் 2 கண்களையும் கட்டிங் பிளேயரால் சேதப்படுத்தினார். வலி தாங்க முடியாமல் ராஜலட்சுமி அலறினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் மணிகண்டன் தப்பி ஓடி விட்டார். கண்களில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த ராஜலட்சுமியை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர்