கள்ளிப்பால் குடித்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
அரியலூர் மாவட்டம் குனமங்கலத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 84 மாணவர்கள் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று (09.09.2024) பள்ளிக்கு அருகில் உள்ள கள்ளிச்செடியில் இருந்த கள்ளிப்பாலைச் சுவைத்துள்ளார்.
இதனையடுத்து இந்த மாணவர் இன்று (10.09.2024) மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை மதிய உணவு இடைவெளியின் போது கள்ளிப் பாலை சுவைக்கச் சொல்லியுள்ளார். அதன்படி மூன்றாம் வகுப்பு மாணவர்களும் கள்ளிப்பாலைச் சுவைத்துள்ளனர். மேலும் கள்ளிப்பாலை விளையாட்டாகச் சாப்பிட்டதாக, ஆசிரியரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆசிரியர்கள் கள்ளிப்பால் சாப்பிட்ட 5மாணவர்களையும் குணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.