காலெக்ட்டர்னா இப்படித்தான் இருக்கணும்! புகார் அளித்த விவசாயி… அதிரடி காட்டிய ஆட்சியர்!
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது காணையை சார்ந்த விவசாயி அண்ணாமலை, விழுப்புரத்தில் செயல்படகூடிய உரம் விற்பனைநிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, ஆட்சியர் மோகன் விவசாயிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விழுப்புரம் நேருவீதியில் செயல்பட கூடிய ஏதாவது ஒரு உரக்கடையில் உரம் வாங்க செல்லுமாறு கூறினார்.
அதன் பேரில் விவசாயி ஆட்சியரிடம் பணத்தை பெற்று கொண்டு நேரு வீதியில் செயல்பட்டு வரும் சக்தி உரக்கடையில் சென்று யூரியாமூட்டை ஒன்று வாங்கிய போது, ஒரு மூட்டை 266 க்கு பதிலாக 390 ரூபாய் என கூறி விற்பனை செய்தனர்.
விவசாயை பின் தொடர்ந்து சென்ற விழுப்புரம் தாசில்தார் ஆனந்த தலைமயிலானோர், உர மூட்டை ஒன்றுக்கு கூடுதலாக 124 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்படவே உடனடியாக ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் உரக்கடைக்கும், உரமூட்டை குடோனுக்கும் சீல் வைக்க ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், ஆட்சியர் மோகன் உரக்கடைகள் இரண்டிற்கும், உர குடோனிற்கும் சீல் வைத்தனர்.
உரக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து கொண்டிருந்தபோது, உரக்கடைக்கு வந்த விழுப்புரம் நகராட்சி 28 வது வார்டு கவுன்சிலர் ரியாஸ் அகமது மற்றும் உர விற்பனை கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் விவசாயி அண்ணாமலையிடம் ஏன் உரமூட்டை கூடுதல் விற்பனைக்கு விற்பனை செய்யப்படுகிறது என ஆட்சியரிடம் புகாரளித்தீர்கள்.
இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விவசாயிகளுக்கு தான் பாதிப்பு ஏற்படும். நாங்கள் யார் என்று காட்டுகிறோம். அனைத்து உரக்கடையும் மூடிட்டா என்ன செய்வீங்க? எங்க போய் உரம் வாங்குவீர்கள் என மிரட்டல் விடுத்தனர். இதனால் உரக்கடை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.