கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை…!!! அதிர்ச்சி சம்பவம்…!!!
பட்டுக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் சண்முகப்பிரியா, கௌசல்யா, சந்தியா, கௌசிகா என்ற நான்கு மகள்களும், ராஜா வசந்த சேகரன் (15) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதேபோல் சக்திவேல் வீட்டின் அருகேயே வசித்து வருபவர் குபேந்திரன் – சரோஜா தம்பதியினர். இவர்களுக்கு குருபிரவு (28) என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சக்திவேல் மகன் ராஜா வசந்த சேகரனை, குபேந்திரன் மகன் குரு பிரபுவும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மீண்டும் இன்று சக்திவேல் குடும்பத்திற்கும் குபேந்திரன் குடும்பத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இரண்டு குடும்பத்திற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்த கைகலப்பு சண்டையில் சக்திவேலின் மகள் சண்முகப்பிரியாவை, குபேந்திரன், அவரது மனைவி சரோஜா மற்றும் அவர்களுடைய மகன் குருபிரபு ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மண்வெட்டியால் தலையில் தாக்கியதில் சண்முகப்பிரியா சம்பவ இடத்திலிருந்து பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகப்பிரியாவை காப்பாற்ற சென்ற அவரது இரண்டு சகோதரிகளையும் குபேந்திரன் மற்றும் குரு பிரபு தாக்கியதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பட்டுக்கொட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்த சண்முகப்பிரியாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சண்முகப்பிரியாவின் சகோதரிகளையும் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் குபேந்திரன் சரோஜா மற்றும் குரு பிரபு ஆகிய மூவரையும் கைது செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் ஒரு இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.