கேரளாவை உலுக்கும் வரதட்சணை கொடுமை: பெண் தூக்கிட்டு தற்கொலை!
75 சவரன் நகை கொடுத்தும் கணவரின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் பெண் ஒருவர் விபரீத முடிவு எடுத்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லம் அருகே உள்ள வண்டித்தனம் பகுதியை சேர்ந்தவர் சஹானா ஷாஜி. இந்த பெண்ணிற்கும் கட்டக்கடா பகுதியை சேர்ந்த நவ்பல் என்ற இளைஞருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, 2 வயதில் குழந்தை உள்ளது.
இதில், சஹானா ஷாஜியின் குடும்பத்தினர் திருமணத்தின் போதே 75 சவரன் நகைகள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் நவ்பல்லும், மாமியார் சுமிதாவும் சஹானாவை துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து, கணவர் மற்றும் மாமியாரின் டார்ச்சரால் சஹானா தனது தாயார் வீட்டிற்கு குழந்தையுடன் வந்துள்ளார். இந்நிலையில், மனைவி சஹானாவை சந்திக்க கணவர் நவ்பல் வண்டித்தனத்திற்கு வந்துள்ளார்.
அவர், தனது சகோதரரின் குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் அதில் கலந்து கொள்ள மனைவியை அழைக்க வந்துள்ளார். ஆனால்,மனைவி சஹானா வரமுடியாது என்றதால் அவரை தாக்கிவிட்டு குழந்தையை தூக்கிவிட்டு கணவர் சென்றுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சஹானா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து சஹானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.