கொடுமையாக தாக்கப்பட்ட பெண் காவலர் – விசாரணையில் வெளிவந்த உண்மை.

June 18, 2024 at 12:11 pm
pc

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராணி. இவர் காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் மேகநாதன். தம்பதியர் இருவருக்கும் 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெண் காவலர் டில்லி ராணி இன்று வழக்கம் போல் தனது பணியினை முடித்து விட்டு காவல்நிலையத்திலிருந்து பிற்பகல் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெரு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகே வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சீருடையில் இருந்த டில்லி ராணியை சரமாரியாக வெட்டி கொடூர தாக்குதலில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக நடந்த இந்தக் கொடூர தாக்குதலில் பெண் காவலர் டில்லி ராணியின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெண் காவலர் டில்லி ராணியை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் டில்லி ராணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் தனது கணவர் மேகநாதன்தான் இச்செயலை செய்ததாக பெண் காவலர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆகையால் அவரது கணவரை முதலில் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டு அவரை வலை வீசித் தேடி வருகின்றனர். ஏற்கெனவே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனைப் பிரிந்து தனது இரு குழந்தைகளுடன் பெண் காவலர் தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் விவாகரத்து கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் பெண் காவலர் மனுவும் கொடுத்துள்ளார். இந்தச் சூழலில்தான், குடும்ப தகராறில் விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் தனது மனைவியான டில்லி ராணியை, அவரது கணவர் மேகநாதன்தான் வெட்டி இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சீருடையில் இருந்த பெண் காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website