கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு “ரோபோ” கண்டுபிடித்த சென்னை இளைஞர்கள்…
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவத்தொடங்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை கொளத்தூரை சேர்ந்த இளைஞர்களான கார்னர் ஸ்டோன் ஆட்டோமேஷன் நிறுவனர் சுப்பிரமணியன் மற்றும் இணை நிறுவனர் பிரேம்நாத் ஆகியோர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நவீன ரோபோ ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த ரோபோ கொரோனா நோயாளிகளுக்கு உடல் வெப்பநிலையை கண்டறிதல், உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுப்பிரமணி, பிரேம்நாத் ஆகியோர் கூறியவதாவது:-
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளுக்கு உதவி செய்யும் வகையிலான ரோபோ ஒன்றை நாங்கள் தயார் செய்து இருக்கிறோம். அதாவது கொரோனா நோயாளிகளின் உடல் வெப்பநிலை அறிவதற்காகவும், உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்குவதற்காகவும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நோயாளியின் அருகில் அடிக்கடி செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த ரோபோவை தயாரித்து உள்ளோம்.
இந்த ரோபோவின் முகப்பு பகுதியில் ஒரு ஸ்கிரீன் இருக்கும் அதில் உத்தரவு பிறப்பிக்கும் டாக்டர் அல்லது நர்சின் முகம் வீடியோ காட்சியாக தெரியும். அவர்கள் கூறும் அறிவுரைகள் கேட்கும் வகையில் ஒரு ஸ்பீக்கரும் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த ரோபோ மூலம் கொரோனா வைரஸ் தாக்கிய முதல் கட்ட(ஆரம்ப நிலை) மற்றும் மூன்றாம் கட்ட(நோய் குணம் அடைந்து அவர்களால் எழும்பி இருக்கும் நிலையில் உள்ளவர்கள்) நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே இதனை பயன்படுத்த முடியும். டாக்டர்கள் விரும்பும் வகையில் இதனை வடிவமைக்கலாம். இதற்கு அரசு அனுமதி பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். விரைவில் அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம்.