‘சடலமாக தாய்; பள்ளியில் இருந்து காணாமல் போன குழந்தை’ – வழக்கில் திடீர் திருப்பம்!
நாகை மாவட்டம் கரியாப்படினத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மனைவி நீலாவதி. இவர் கணவரைவிட்டுப் பிரிந்து வந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சந்திரசேகரனுடன் சென்று விட்டார். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜாதோப்பு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு வாடகை வீட்டில் 7 வயது பெண் குழந்தையுடன் தங்கி இருந்த நீலாவதி (வயது 28) தங்கி இருந்தார். மணமேல்குடியில் தங்கியிருந்த நீலாவதி வீட்டிற்கு சந்திரசேகரும், கோட்டைப்பட்டனத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்ற நபரும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
சம்பவ நாளான செவ்வாய்க்கிழமை காலை அருண்பாண்டியன் நீலாவதியின் மகள் குசினியைப் பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். மதியம் பள்ளிக்கு வந்த சந்திரசேகர் கனிசினியின் சித்தப்பா என்றும் நீலாவதிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவமனைக்குப் போக வேண்டும் ஆகவே கனிசினியை அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். மாலை வரை நீலாவதி வீட்டில் நடமாட்டம் இல்லை, சிறுமி கனிசினியும் வீட்டில் காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் நீலாவதி வீட்டிற்குச் சென்று பார்த்தனர்.
அப்போது வீடு பூட்டி இருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்த போது தலையில் ரத்த காயங்களுடன் கழுத்தில் சேலையால் இறுக்கப்பட்டு நீலாவதி இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே போலிசாருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுக்க கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மணமேல்குடி போலிசார் நீலாவதி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) பிரேதப் பரிசோதனை செய்து நீலாவதி உடலை அவரது தாய் கத்தரிப்புலம் பனையடிகுத்தகை புஷ்பவள்ளியிடம் ஒப்படைத்தனர். மகள் சடலத்தைச் சொந்த ஊருக்கு கொண்டு போக விரும்பாத புஷ்பவள்ளி புதுக்கோட்டை போஸ்நகர் மின் மயானத்தில் தகனம் செய்தார். இந்த நிலையில் பள்ளியில் இருந்து சிறுமியை அழைத்துச் சென்றது யார் என்று பள்ளியில் விசாரித்ததுடன் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து சந்திரசேகர் தான் குழந்தையை அழைத்துச் சென்றது என்பது தெரிய வந்தது. மேலும் தான் அழைத்துச் சென்ற சிறுமியை பனையடிகுத்தகையில் அவரது பாட்டி வீடு அருகே இறக்கி விட்டுச் சென்றவர் செல்போனை சுவிட்ஸ் ஆஃப் செய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார் என்று போலிசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஜாம்புவானோடை கிராமத்தில் காட்டுப் பகுதியில் ஒருவர் உயரமான மரத்தில் தூக்கில் சடலமாக தொங்குவதாக முத்துப்பேட்டை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பின்னர் அங்கு சென்று பார்த்த போது அந்த நபர் மணமேல்குடி போலிசாரால் தேடப்பட்டு வரும் சந்திரசேகரன் என்பது தெரிய வந்தது. சடத்தை மீட்ட போலிசார் பிரேதப் பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலிசார் கூறும் போது, “நீலாவதியின் கணவர் விஜயகுமாரின் உறவினரான சந்திரசேகர் அடிக்கடி நீலாவதி வீட்டிற்குச் சென்ற போது பழக்கம் ஏற்பட்டு கடந்த 2021 இல் நீலாவதி தனது மகளுடன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது கரியாபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு நீலாவதி மற்றும் அவரது மகளை மீட்ட போலிசார் நீலாவதியின் அம்மா புஷ்பவள்ளியிடம் ஒப்படைக்க மீண்டும் சந்திரசேகருடன் சென்று மணமேல்குடியில் தங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் அருண்பாண்டியனுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திரசேகருக்கும் நீலாவதிக்கும் பிரச்சனை ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இந்தநிலையில் தான் நீலாவதி கழுத்து இறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்தது. அவரது மகளை சந்திரசேகர் அழைத்துச் சென்று நீலாவதி தாயார் வீடு அருகே விட்டவர் தன்னை போலிசார் தேடுவது தெரிந்து சொந்த ஊரான ஜாம்புவானோடை சென்றவர் காட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்” என்றனர். மேலும் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை அறிய நீலாவதி வீட்டிற்கு அன்று காலை வந்து சென்ற கோட்டைப்பட்டினம் அருண்பாண்டியனிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். போலிசாரால் தேடப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.