“சாதிப் பெயர்கள் வேண்டாம்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
சென்னை எழும்பூரில், நெல்லை – தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத்தின் சார்பில் வியாபாரிகளுக்கான கட்டட திறப்பு விழா விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலை திறப்பு நிகழ்ச்சி ஆகியவை இன்று (16.09.2024) நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.யுமான கனிமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் படித்துக் கொண்டிருக்கும்போது, அந்த வகுப்பில் இருந்த மாணவர் ஒருவர் ‘தமிழ்நாடு மட்டும் தனியாகத் தெரிகிறது. ஏன் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மறுக்கிறீர்கள்’ என்று கூறினார். அப்போது அவர் அந்த வகுப்பின் பெயர் பட்டியலை எடுத்துக் காட்டி, ‘உங்கள் பெயர்களை எல்லாம் பாருங்கள்.
எங்கள் பெயர்களை எல்லாம் பாருங்கள். எங்கள் பெயருக்குப் பின்னால் நாங்கள் மனிதர்கள். எங்கள் தந்தை பெயரோடு நிறுத்தி கொண்டோம். ஆனால் உங்கள் பெயரைப் பார்த்தாலே நீங்கள் என்ன சாதி, எந்த ஊர் என்று எல்லாம் வெளிப்படையாகத் தெரிகிறது.
இது தந்தை பெரியாரின் மண், பேரறிஞர் அண்ணாவின் மண், கல்விக் கண்ணை சாதி, மதம் என்ற எந்த காழ்ப்புக்களும், பிரிவுகளும் இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தன் வாழ்நாள் எல்லாம் உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் மண், கலைஞர் வாழ்ந்த மண்.
இந்த விழா அழைப்பிதழில் பலரின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் உள்ளது. எனவே மீண்டும் ஒரு முறை இப்படிச் சாதிப் பெயரைப் போட வேண்டாம். நாம் எல்லோரும் மனிதர்கள். நாம் எல்லோரும் உழைப்பாளிகள். சமமானவர்கள். நாம் எல்லாரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். இதனை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.