சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஊழியரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற கும்பல்!
உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட வெயிட்டரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, பீட் மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு காரில் வந்து 3 பேர் சாப்பிட்டுள்ளனர். பின்பு, வெயிட்டரை அழைத்து பணம் கொடுப்பதற்காக UPI QR code ஸ்கேனரை கொண்டு வருமாறு கூறினர்
பின்னர், அவர் வருவதற்குள் சென்று விடலாம் என்று நினைத்த மூவரும் காரில் ஏறி தப்ப முயன்றனர். ஆனால், அவர்கள் காருக்குள் ஏறும் சமயத்தில் வெயிட்டர் அங்கு சென்று பில்லை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அவர்கள் காரின் பக்கவாட்டு கதவு வழியே வெயிட்டரின் கையை பிடித்தபடி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், காரை நிறுத்தி அவரை துன்புறுத்திய பின் வெயிட்டரின் பையில் இருந்த ரூ.11,500 பணத்தையும் எடுத்துள்ளனர். இதன்பிறகு, அவரது கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது தொடார்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில் தப்பிச் சென்ற மூவரையும் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.