சாராயம் காய்ச்சி குடித்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதி!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(65). அடுப்புக்கரி வியாபாரம் செய்து வரும் இவர் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக சாராயம் காய்ச்சி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலைக்குத் தெரியவர, உடனடியாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருடன் தேவன் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியுள்ளார்.
சோதனையில் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஊறல் மற்றும் காய்ச்சி வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர். மேலும் தேவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, சாராயத்தைக் காய்ச்சி தன்னிடம் வேலை செய்யும் மணி, பெருமாள், அய்யனார், ராதா கிருஷ்ணன், மதுரை ஆகிய 5 பேருக்கு குடிக்கக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் அதில் 3 பேரை பிடித்து முழு மருத்துவ பரிசோதனை செய்தனர். மூவருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எஞ்சியுள்ள 2 பேருடன் சேர்த்து 5 பேரும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.