சித்திரவதை செய்யப்பட்ட இளைஞன் மரணம் -வட்டுக்கோட்டை பொலிசாரை கைது செய்ய வேண்டும்!

November 21, 2023 at 7:04 pm
pc

வட்டுக்கோட்டை வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞன் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அவர் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,பொலிஸ் காவலில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு, உடல்நிலை சீராக இல்லாத நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.அந்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் வெளியிட்ட காணொளியில், பொலிஸார் பெற்றோல் பையினுள் தன்னை நுழைத்து அடித்ததாகவும், தலைகீழாக கட்டித்தூக்கி முகத்தினை துணியினால் மூடிக் கட்டி, இரண்டு கைகளையும் பின் பக்கமாக கட்டி, தண்ணீர் ஊற்றி ஊற்றி அடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒருநாள் முழுவதும் சாப்பாடு வழங்காமல், சாராயத்தினை குடிக்குமாறு வழங்கி குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கோ அல்லது வேறு எங்குமோ சென்று முறையிட கூடாது என்றும் மிரட்டியதாக அந்த இளைஞன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.இது எல்லாம் பொலிஸ் நிலையத்தில் நடக்கும்போது பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எங்கே சென்றார்? அவர் ஏன் இதனை தடுக்கவில்லை. தாக்குதல் நடாத்தி பொலிஸாரை ஏன் தண்டிக்கவில்லை.குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது. உயிரிழந்த இளைஞனின் மரண வாக்குமூலம் சித்திரவதைகள் அம்பலமாகும் நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்ளுக்கு இடமாற்றம் வழங்குவதுடன் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது வெறும் கண்துடைப்பாகும். உடனடியாக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும்.வட்டுக்கோட்டை பொலிஸாரின் செயற்பாடுகள் அண்மைக் காலமாக அராஜகமான ரீதியில் செல்வதை ஊடகங்கள் மூலம் வெளியாகும் செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன. செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து அவர்களை செய்தி சேகரிக்க விடாது இடையூறுகளை விளைவிக்கின்றனர். தங்களது தரப்பில் உள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவா இவ்வாறு ஊடகவியலாளர்களை தடுக்கின்றார்கள் என்ற சந்தேகமும் எழுகின்றது.எனவே பொலிஸார் தமது கடமைகளை சரிவர செய்யவேண்டும். சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டியது தான் பொலிஸாரின் வேலை. அதை விடுத்து தாங்கள் சட்டத்தை கையில் எடுத்து சித்திரவதைகளில் ஈடுபட முடியாது – என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website