சென்னையில் தொடரும் வழிப்பறிப்பு :பொறியாளரை கத்தியால் தாக்கி வழிப்பறி -அச்சத்தில் பொதுமக்கள்!

சென்னை பாடியில் இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்ற தனியார் நிறுவன பொறியாளர் உட்பட ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடியில் டி.வி.எஸ் நகரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவிட்டு அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாத காரணத்தினால் தள்ளிக்கொண்டே வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அவரின் தலையில் கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.
படுகாயமடைந்த வெங்கட்ராமன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று, திருமுல்லைவாயலை சேர்ந்த உலகப்பன், ஒரகடம் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இரவு பணி முடிந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்த அவரை இதே 3 மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி செல்போன் மற்றும் மணிபர்ஸை கொள்ளையடித்து சென்றனர்.
அதாவது கடந்த 10 நாட்களில் மட்டும் 30க்கும் மேற்பட்டோரிடம் வழிப்பறி நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.