சென்னை மக்களே உஷார்…. கோடை வெயில் தாக்கம் வரும் நாட்களில் அதிகரிக்கும்!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.
சென்னையில் வெயில் தற்போது வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. பிற்பகல் 4 மணிக்கு கூட வெயிலின் உஷ்ணம் தாக்கி வருகிறது. வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக வீசி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்தது. 15-ந்தேதிக்கு பிறகு சராசரி வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் நம்புவதால் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
கிழக்குப்பகுதியில் இருந்து வரும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் அதிகரித்து உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கீழ்த்திசை காற்று இல்லாததால் வருகிற நாட்கள் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். பருவத்திற்கு இயல்பான வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை திடீரென உயரலாம் என்று கூறியுள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், `அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும். 15-ந்தேதிக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இது பருவத்திற்கு இயல்பானது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை காலத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருந்து இயல்பை விட குறைவாக இருக்கும். நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் இந்த மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 36.4 டிகிரி செல்சியஸ் ஆகும்’ என்றார்.
கடந்த திங்கட்கிழமையை விட நேற்று சென்னையில் வெப்பம் அதிகரித்தது. ராயலசீமா மற்றும் தெலுங்கானா வரை வறண்ட வானிலை நிலவுகிறது. வடகிழக்கு காற்று நுழைவதால் அடுத்த 4, 5 நாட்கள் வெப்ப நிலை படிப்படியாக உயரும் என்று தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் கூறினார்