“சோறு போடும் மக்களை கூறு போட பார்ப்பதா?” ஏரிகளை அழித்து ஏர்போர்ட்டா?..போராட்டத்தில் மக்கள்…
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய இருக்கிறது. இதற்கான இடத்தை மாநில அரசு தேர்வு செய்து பரிந்துரைத்தது. அதனை ஏற்று மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இங்கு தான் சிக்கலே ஆரம்பித்தது. அதாவது, விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று பரந்தூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல. வாரக்கணக்கில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பகலில் மட்டுமே போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் திடீரென இரவிலும் கண் விழிக்க தொடங்கினர். குடியிருப்புகள், விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் நாள்தோறும் தங்களது பணிகளை முடித்துவிட்டு இரவு நேரங்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். இதையடுத்து போதிய ஆலோசனை நடத்தி விட்டு சுமார் 1 மணி நேரம் இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 50வது நாள் இரவாக நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் பள்ளி சீருடைகளில் சிறுவர்களும், பெண்கள் தங்களது கண்களை கருப்பு துணியினால் கட்டிக் கொண்டும் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். அதில் ”விவசாய நிலத்தை அழிக்காதே”, “விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” போன்ற பதாகைகளை ஏந்தினர்.
இதுதவிர கருப்பு கொடிகளை தங்களது கைகளில் ஏந்திவாறு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அப்போது “காப்போம் காப்போம் விவசாயத்தை காப்போம்”, “சோறு போடும் மக்களை கூறு போட பார்ப்பதா?” என கோஷங்களை எழுப்பினர். விவசாயத்தை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்று குரல் கொடுத்தனர்.