“டெலிவரியில் கணவரும் இருக்கணுமா?” மருத்துவமனை விளம்பரத்தால் கர்ப்பிணி மரணம்: சென்னையில் நடந்த பயங்கரம்
சென்னையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை விளம்பரம்
சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்த தம்பதியினர் அஜித் (27) மற்றும் சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இதில், சுகன்யா கர்ப்பமாகி, முதல் 5 மாதங்கள் புழல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்த்து வந்துள்ளார்
இந்நிலையில், சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள WCF என்ற தனியார் மருத்துவமனை விளம்பரத்தை சுகன்யா பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் பிரசவத்தின் போது பெண்ணின் கணவர் உடன் இருந்து பார்த்து கொள்ளலாம் என்று இருந்ததை பார்த்து சுகன்யா ஆசைப்பட்டுள்ளார்.
பின்பு, மனைவியின் ஆசையை நிறைவேற்றமென்று நினைத்த அஜித், சுகன்யாவை கடந்த நான்கு மாதமாக சென்னை தி.நகரில் உள்ள WCF மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
WCF மருத்துவமனையில் பிரசவம்
இதனைத்தொடர்ந்து WCF மருத்துவமனையில் பிரசவம் பார்க்க தம்பதிகள் முடிவு செய்த நிலையில், கடந்த 16 -ம் திகதி சுகன்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனால், அன்று மதியமே தி.நகரில் உள்ள WCF மருத்துவமனையில் சுகன்யாவை அனுமதித்துள்ளனர்.
அங்கு, சுகன்யாவுக்கு ஊசியில் சில மருந்துகளை செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்பு, சுகன்யாவுக்கு வலிப்பு வரவே, அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது, ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், இதில் சுகன்யா சுயநினைவின்றி இருந்ததால் தற்போது எதுவும் கூற முடியாது என வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மரணம்
இதனால், அஜித் தனது மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேறு வழி இல்லமால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது, சுயநினைவின்றி இருந்த சுகன்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட போதிலும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பிறந்த ஆண் குழந்தையின் உடல் நிலையும் மோசமானதால் இன்குபேட்டரில் வைத்துள்ளார்கள். இதனால், ஆத்திரமடைந்த அஜித், தனது மனைவி சுகன்யா உயிரிழப்பிற்கு WCF மருத்துவமனையில் முறையான மருத்துவம் பார்க்காமல் தவறான சிகிச்சை அளித்ததே எனக் கூறி மருத்துவமனை முன்பு உறவினர்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தினார்.
அப்போது, அஜித் சாலையில் சென்ற லாரி முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் உயிர் தப்பினார். மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் அஜித் புகார் அளித்தார்.
பின்பு, காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.