ட்ரம்பிற்காக கட்டப்பட்ட கோயிலில் வழிபாடு செய்த இந்திய கிராம மக்கள்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில் இந்திய கிராமம் ஒன்றில் அவரது சிலைக்கு வழிபாடு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபராக ஜேடி வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டப்படிப்பு படித்து, செனட்டராக பணியாற்றி வரும் ஜேடி வான்ஸ் ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். இவரது மனைவி உஷா சிலுக்கூரி ஒரு இந்தியர்.
அதாவது, இவருடைய மூதாதையர்கள் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டம், உய்யூரு மண்டலம், சாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இதனால், டொனால்டு ட்ரம்பின் வெற்றியை தெலுங்கு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய மாநிலமான தெலுங்கானா, ஜங்கான் மாவட்டத்தில் உள்ள கொன்னே கிராம மக்கள் டொனால்டு டிரம்ப்பிற்கு கட்டப்பட்டுள்ள கோவிலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.
கடந்த 2018 -ம் ஆண்டில் கிருஷ்ணா என்ற இளைஞர் தனது பூஜை அறையில் ட்ரம்பின் புகைப்படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தார்.
பின்னர், 2019 -ம் ஆண்டில் வீட்டின் முன்பு 6 அடி உயர டிரம்ப் சிலையை அமைத்து பால் அபிஷேகம் செய்தார். இதற்காக அவர் ரூ.2 லட்சம் வரை செலவிட்டுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2020 -ம் ஆண்டில் கிருஷ்ணா மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், ட்ரம்ப் வெற்றியை கொண்டாடும் வகையில் கிருஷ்ணாவின் உறவினர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.