தனது பெயரில் வீட்டுமனை எழுதி தரவில்லை என கணவரை சங்கிலியால் கட்டி 3 நாட்கள் சித்ரவதை! வீடியோவால் சிக்கிய மனைவி
தெலங்கானாவில் தனது பெயரில் வீட்டுமனை எழுதி தரவில்லை என கணவரை சித்ரவதை செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.
இந்திய மாநிலம் தெலுங்கானாவில் உள்ள மேட்சல் பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்டு, சித்ரவதைக்கு ஆளான நபர் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நரசிம்மா என்பவர் பெயரில் உள்ள வீட்டினை தனது பெயருக்கு மாற்றி தருமாறு அவரின் மனைவி கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அடுத்து நரசிம்மா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த நரசிம்மாவை, தனது உறவினர்களின் உதவியுடன் மனைவி கண்டுபிடித்துள்ளார்.
பின்னர் தன் கணவரை சங்கிலியால் கட்டி அடித்து உதைத்துள்ளார். வீட்டினை தன் பெயருக்கு எழுதி தருமாறு அவரின் மனைவி மூன்று சித்ரவதை செய்துள்ளார்.
பக்கத்துவீட்டுக்காரர் இதனை வீடியோவாக எடுத்ததைத் தொடர்ந்து, தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு சென்று நரசிம்மாவை மீட்டனர்.
மேலும், அவரை கொடுமைப்படுத்திய மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.