‘தனியொருவன்’ தொடர்ந்த வழக்கு: ஓலா நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம்!
ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு கொடுக்குமாறு ஓலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குருராஜ் என்பவர் வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வருடத்திற்குள்ளாகவே பேட்டரியில் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குருராஜ் இ-மெயில் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் ஓலா நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி பிரச்சனையை சரி செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்காக திருச்சியில் உள்ள சர்வீஸ் சென்டர், ஓசூரில் உள்ள ஓலாவின் தலைமை அலுவலகம் ஆகியவற்றை பலமுறை அணுகியுள்ளார். ஆனால் ஓலா நிறுவனம் அதற்கு சரியான பதில் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் மீது குருராஜ் சேவை குறைபாடு காரணத்தை குறிப்பிட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம், சேவையை சரியாக செய்யாமல் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஐம்பதாயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்காக பத்தாயிரம் ரூபாயும் என மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்ப்பளித்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக சந்தைப்படுத்தி வரும் ஓலா நிறுவனம் விற்பனைக்கு பிறகான சேவையில் சுணக்கம் காட்டுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஓலா நிறுவனத்திற்கு எச்சரிக்கையை கொடுத்திருப்பதாக இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்