திருப்பதி லட்டு விவகாரத்தில் சீமான் கருத்து!
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்த ஆட்சியில் திருப்பதியின் புனிதத்தை கெடுத்து விட்டனர் என்றார்.
அதாவது, கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது திருப்பதி லட்டு பிரசாதம் தயார் செய்வதற்கு விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “திருப்பதி லட்டு தயாரித்த நிறுவனத்தை தான் கேட்க வேண்டும். நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது.
அதை சாப்பிட்டவர்கள் எல்லோரும் உயிரோடு தான் இருக்கிறார்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை, இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறலாம்.
முன்பு ஒப்பந்தம் கொடுத்தவருக்கு அதனை நீக்கிவிட்டு வேறு வேலையை பார்க்கலாம். ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினையே இங்கு ஏராளமாக உள்ளது.
அதை பற்றி பேச ஏன் மறுக்கிறீர்கள். திருப்பதி லட்டு அப்படி தயாரிக்க கூடாது என்றால் தயாரித்தவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.