திருமணமான பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த 23 வயது இளைஞன்!

January 8, 2021 at 12:03 pm
pc

தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர் உதயகுமார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார். தற்போது கொரோனா காரணமாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், உதயக்குமார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது அங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்ற 23 வயது நபர் அறிமுகமாகியுள்ளார்.

விக்னேஷ், உதயகுமாரிடம் தான் ஒரு தொழிலதிபர், குடிநீர் விற்பனை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் விற்பனை செய்வதாகவும், பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, சில நாட்களில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். உதயகுமார் வீட்டுக்கு அடிக்கடி வந்த விக்னேஷ், தன்னுடன் இணைந்து தொழில் செய்தால், லாபத்தில் பங்கு தருவதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார். அதை நம்பி, 12 லட்சம் ரூபாய் வரை உதயகுமார் கொடுத்துள்ளார். அதன் பின் விக்னேஷ் தலைமறைவானார். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால், இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுக்க, தலைமறைவாக இருந்த விக்னேஷை பொலிசார் தனிப்படை அமைத்து நேற்று முன் தினம் கைது செய்தனர். கைது செய்த விக்னேஷிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பொலிசார் கூறுகையில், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள விக்னேஷ், ஆங்கிலம் சரளமாக பேசுவதால் பிபிஓ நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

இவர், டிக்டாக் செயலியில் அதிகளவில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதை பல பெண்கள் லைக் செய்துள்ளனர். அவ்வாறு தனது வீடியோவை லைக் செய்யும் பெண்களுடன் சாட்டிங் செய்வது இவரது வழக்கம். அதன்படி, பல பெண்களிடம் தொடர்பு எண்ணை பெற்று, பழகி வந்துள்ளார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதாலும், தன்னை வசதியானவர் என கூறியதாலும் பலர் இவரது வலையில் விழுந்தனர். இவர்களில் வசதியான பெண்களை தெரிவு செய்து, அவர்களிடம், வெளியில் சென்றபோது சிறிய விபத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

அவரமாக பணம் தேவை. உங்களிடம் இருந்தால் கொடுங்க. வீட்டுக்கு வந்து, திருப்பி கொடுத்து விடுகிறேன், என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளான். குறிப்பாக, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகள் இங்கு தனியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்கு வேண்டியதை செய்வது போல் நடித்து, பலரிடம் பணம் பறித்துள்ளான். சென்னை மட்டுமின்றி வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பெண்கள் இவனிடம் ஏமாந்துள்ளதாக பொலிசார் கூறினர்.

மேலும், வெளி மாநிலங்களில் உள்ள பெண்களை சந்திக்க செல்லும்போது, டிப்டாப் உடை மற்றும் கவரிங் நகைகளை அதிகளவில் அணிந்து, விமானத்தில் செல்வது இவரது வழக்கம். ஒவ்வொறு பெண்ணிடமும் ஒவ்வொறு செல்போன் எண்ணில் பேசியுள்ளார். ஒரு பெண்ணை ஏமாற்றியதும், அந்த சிம்கார்டை தூக்கி வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட சில திருமணமான பெண்கள் பொலிசாரை தொடர்பு கொண்டு, தங்கள் கணவருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்தோம். அவருக்கு தெரிந்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, வாழ்கை பாதிக்கப்படும் என்ற பயத்தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும் என கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷிடம் இருந்த 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ள பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால், இன்னும் வேறு என்ன? பித்தலாட்டம் எல்லாம் செய்தான் என்பது தெரியவரும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website