திருமணம் செய்வதாக கூறியதை நம்பி பணம், வைரங்களை இழந்த லண்டன் பெண்!நீலகிரி மாவட்டத்தில்அதிர்ச்சி சம்பவம் ….

April 28, 2022 at 10:07 am
pc

லண்டனை சேர்ந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம், நகைகளை மோசடி செய்த நபர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டனை சேர்ந்தவர் பார்பரா எலிசபெத் (67). இவர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதன்படி எலிசபெத்தின் தாத்தா, பாட்டி சுதந்திர இந்தியாவிற்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் இந்தியா வந்துள்ளனர். 

அப்போது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக வசித்த பிரிட்டிஷ் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. பிரித்தானிய அரசு குடும்பத்திற்கு பார்பரா எலிசபெத்தின் குடும்பம் நெருக்கமானவர்கள் எனவும், இவரது சகோதரர் லண்டன் முன்னாள் மேயராக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் மசினங்குடியில் மூன்று தலைமுறைகளுக்கு முன்பிருந்தே இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு வீடுகள் உடன் கூடிய இரண்டு ஏக்கர் நிலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

லண்டனில் இருந்து அவ்வபோது நீலகிரிக்கு வரும் எலிசபெத் தனது நிலங்களை கவனித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த போது ஆங்கிலோ-இந்தியனான டொனால்ட் ஆலென் பார்கலே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தனியாக வசித்த எலிசபெத்தை காதல் வலையில் வீழ்த்திய டொனால்ட் பார்கலே திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்ததாகவும், அவரது வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். 

இதனால் இங்கிலாந்து பெண்ணின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு அதில் இருந்து 25 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து விட்டதாகவும், மேலும், இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதை நம்பி லட்சக்கணக்கில் மதிப்புடைய வைரம், பிளாட்டினம் நகைகளை டொனால்ட் ஆலென் பார்கவே வாங்கிக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் தன்னை மோசடி செய்வதை உணர்ந்ததால் தான் விலகிவிட்டதாகவும் ஆனால் தன்னை திருமணம் செய்துவிட்டதாக தனது பெயரை, தனது கணவன் எனக்கூறி பலரிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.  

மேலும் டொனால்ட் ஆலென் பார்கலே மூலம் அறிமுகமான மார்கஸ் என்ற நபரும் மசினகுடியில் உள்ள பழங்குடி மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தரலாம் என தன்னிடம் கூறிவிட்டு தனது பெயர் மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ள எலிசபெத், அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் மீது பொலிசார் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website