நன்கு விளையாடாத மாணவர்களை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்!
அரசு உதவி பெறும் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் பொது இடத்தில் மாணவர்களை காலால் எட்டி உதைத்து கடுமையாக தண்டிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதில் கால்பந்து போட்டியில் பங்கேற்ற பள்ளியின் மாணவர்கள் முதல் பாதி ஆட்டத்தை சரியாக விளையாடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மாணவர்களை ஷூ காலால் வயிற்றில் எட்டி உதைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.