அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை 2015 ஆண்டு இடித்து தரை மட்டமாக்கியது தொடர்பான வழக்கில், பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய ஹென்றி மகேந்திரனுக்கு 1,500 ரூபாய் தண்டபணமும் 55,000 ரூபாய் நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும் மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.பாதிக்கபட்ட தரப்பினர் உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் எம்.எஸ். காரியப்பர், வீதிப் பெயர் பலகை உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்டு மன்று 1,500 ரூபாய் தண்டபணமும் 55,000 ரூபாயட நஷ்டஈடும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.பிரதி வாதி சார்பாக சட்டத்தரணி என்.சிவரஞ்சித் இசட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் அப்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் இவ்வீதியை திறந்து வைப்பதற்காக மாநகர சபையினால் அப்பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டிருந்தது.அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பிரதமரின் வருகைக்கு முன்னதாக ஹென்றி மகேந்திரன் தலைமையில் பேரணியாக சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹென்றி மகேந்திரன் பெரும் சுத்தியல் ஒன்றினால் குறித்த கல்வெட்டை அடித்து நொறுக்கி விட்டு சென்றிருந்தார்.அதன் பின்னர் அப்போதைய கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.