நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் நேரில் ஆய்வு!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி இரவு கடும் மழை பெய்த நிலையில், 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக்கிராமத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால் மூன்று கிராமத்தில் வசித்த மக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது.
மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணுக்குள் புதைந்தும் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை , இந்திய ராணுவம் என அனைத்து துறைகளும் ஒன்றாக சேர்ந்து மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதனிடையே இதனைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர், எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை மத்திய அரசு மௌனம் காத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கேரளா வந்த பிரதமர் மோடி, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹெலிகாப்டரில் இருந்தபடியே பார்வையிட்டார்.
அவருடன் முதல்வர் பினராயி விஜயன், பாஜக எம்.பி.சுரேஷ்கோபி மற்றும் ஆளுநர் இருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட பின், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் ஆய்வுக்குப் பின் பிரதமர் மோடி கல்பெட்டாவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார், இந்த ஆய்வுக்கூட்டத்தில் கேரள மாநில முதன்மைச் செயலர் வேணு பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடிக்கு எடுத்துக்கூறினர்.
பின்பு பிரதமர் மோடியிடம் இந்த பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரண நிதியாக ரூ.2000 கோடி மத்திய அரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கேரள முதல்வர், பாஜக எம்.பி.சுரேஷ் கோபி, பாதிப்புக்குட்பட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.