‘நீலகிரியில் நிலச்சரிவு அபாயமுள்ள இடங்கள்?’ – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
கேரளாவில் பெய்த அதீத கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து பல நாட்களாக அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்த அரசாணையில் தமிழகத்தில் மலை கிராமங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி என மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களைக் கண்காணிக்க வேண்டும்’ என உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் மற்றும் அதற்கான சாத்தியக்கூறு உள்ள இடங்களை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தியில் ‘நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த பணிகள் முடிந்த பின் புவியியல் துறை வல்லுநர்கள் ஆய்வு செய்வார்கள். கூடலூர் கோக்கால் பகுதியில் வீடுகளில் ஏற்பட்ட விரிசல்களை புவியியல் துறை அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.